கல்குவாரி விபத்தில் 5 பேர் பலியான சோகம்.! பேரிடர் மீட்பு படை விரைவு..,
சிவகங்கை மாவட்டத்தில் கல்குவாரியில், மண்ணும், பாறைகளும் சரிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிழந்த சோகம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் 450 அடி ஆழமுள்ள இந்த குவாரியில் திடீரென பெரிய அளவில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. பாறைகளை அகற்றுவதற்காக பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த சரிவு நிகழ்ந்தது.
மேலும், இடிபாடுகளில் சிக்கிய 2 பேரை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனால், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டதின் பேரில், தேசிய பேரிடர் மீட்புப் படை என்.டி.ஆர்.எப்., 30 பேர் கொண்ட மீட்பு படை வீரர்கள் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து விரைகின்றனர்.