புதுச்சேரியில் நாளை தவெக பொதுக்கூட்டம் – தொண்டர்களுக்கு விஜய் கொடுத்த அறிவுரை!

புதுச்சேரியில் நாளை தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில், கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க அனுமதி இல்லை

Featured image

சென்னை :நாளை (டிசம்பர் 9, செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு புதுச்சேரி உப்பளத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் “புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி” நடைபெற உள்ளது. இது தவெகவின் முதல் புதுச்சேரி பொதுக்கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, QR குறியீடு கொண்ட நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் – எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் – இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என்று தவெக தலைமை தெளிவாகத் தெரிவித்துள்ளது. “தலைவர் அவர்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்” என்று கூறி, தமிழக தொண்டர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி முழுவதும் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்பதால், தமிழகத்தில் இருந்து வீட்டில் இருந்தபடியே கண்டுகளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜய்யின் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சியின் ஒழுங்கை முன்னிட்டு விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தை உடன் வரும் தாய்மார்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை என்றும், அவர்கள் வீட்டில் இருந்து நேரலையில் கண்டு மகிழுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு காரணங்களுக்காகவே என்று தவெக தலைமை விளக்கமளித்துள்ளது.

வாகனங்களில் தலைவரைப் பின்தொடர்வது, போக்குவரத்துக்கு இடையூறு செய்வது, சாலையில் அலங்கார வளைவுகள் அமைப்பது, பிளக்ஸ் பேனர்கள் வைப்பது, மின் கம்பங்கள் ஏறுவது, சிலைகள் அருகே செல்வது உள்ளிட்ட அனைத்து செயல்களும் தடை செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை காவல்துறை அனுமதித்த பாண்டி மெரினா பார்க்கிங், பழைய துறைமுகம், இந்திரா காந்தி விளையாட்டரங்கு பின்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சி முடிந்தவுடன் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.கழக நிர்வாகிகள் தலைமைக் கழகம் வழங்கிய பேட்ஜ் அணிந்தும், தன்னார்வலர்கள் சீருடை அணிந்தும் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எந்தவொரு சூழலிலும் சட்டம்-ஒழுங்கை மீறுவது, போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவது, பொதுமக்களுக்கு இடைஞ்சல் தருவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய்யின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி புதுச்சேரியில் மட்டுமே நடத்தப்படுவதால், தமிழக தொண்டர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. “தலைவர் அவர்களின் பாதுகாப்பும், நிகழ்ச்சியின் வெற்றியும் நம் அனைவரது பொறுப்பு” என்று கூறி, அனைவரும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தவெக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. நிகழ்ச்சி நேரலையில் தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.