அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!
திருப்புவனம் அருகே காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் ரூ.2 லட்சம் நிதி வழங்கினார்.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் கடந்த ஜூன் 28ம் தேதி அன்று விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டுக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று காலை அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செய்து, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் இன்று மாலை அஜித்குமாரின் வீட்டிற்கு சென்றார். அப்பொழுது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த அஜித்குமாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து விஜய் அஞ்சலி செலுத்தினார். தவெக தலைவர் விஜயுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் உடனிருந்தார்.
பின்னர், அஜித்தின் தாய் & தம்பியின் கைகளை பிடித்து ஆறுதல் கூறியதோடு, ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தார். மேலும், மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை தவெக உங்களுடன் இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.