தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கழகத் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இக்குழு தமிழகம் முழுவதும் பொதுமக்கள், சிறு-குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், பொருளாதார வல்லுநர்கள், வர்த்தக சபைகள், விவசாயிகள் சங்கங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளையும் தேவைகளையும் கேட்டறியும்.பெறப்படும் கருத்துகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டு மக்களையும் மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
இக்குழுவில் மருத்துவர், வழக்கறிஞர், பொருளாதார வல்லுநர், தொழிலதிபர், கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். கழகத் தோழர்கள் இக்குழுவுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர்களாக டாக்டர் கே.ஜி.ஏ (எம்பிபிஎஸ், முன்னாள் ஐஆர்எஸ்), ஜே.சி.டி. பிரபாகரன் (பிஏ., பிஎல்., முன்னாள் எம்எல்ஏ), ஏ. ராஜ்மோகன் (பிடெக் ஐடி), டி.எஸ்.கே. மயூரி (எம்ஏ), பேராசிரியர் ஏ. சம்பத்குமார் (எம்பிஏ, எம்பில், பிஹெச்டி), எம். அருள் பிரகாசம் (எம்காம்), விஜய் ஆர். பரணிபாலாஜி (பிஏ எல்எல்பி), ஜே. முகமது பர்வேஸ் (பிஏ, எல்எல்பி ஆனர்ஸ்),
டாக்டர் டி.கே. (பிடிஎஸ், எம்எஸ்டி, எம்எஸ்சி), கே. கிறிஸ்டி பிருத்வி (பிஇ, எம்பிஏ), எம்.கே. தேன்மொழி பிரசன்னா (பிடெக் ஐடி), ஏ.எம்.எல். (எல்எல்எம், ஏசிஏ, ஏசிஎம்ஏ, ஏசிஎஸ்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.கழகத் தோழர்கள், இக்குழு உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் போது தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். இத்திட்டம் மக்களின் குரலை நேரடியாக தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. தவெகவின் இந்த முன்முயற்சி தேர்தல் களத்தில் புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
