தமிழக வெற்றிக்கழகம் (தவெக) சார்பில் இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக்காக போடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.ஈரோடு மாவட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகளிர் தினத்தன்று தலைவர் விஜய் வெளியிட்ட 10 அறிவிப்புகள் தமிழக மக்களை வியக்க வைத்ததாகவும், எல்லா வாக்காளர்களும் தவெக பக்கமே இருப்பதை கண்கூடாக பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார். 234 தொகுதிகளிலும் தலைவர் விஜய் கை காட்டும் நபரே வேட்பாளராக இருப்பார் என்றும் உறுதியாக கூறினார்.தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்புவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்திய செங்கோட்டையன், தவெக தனித்தே நிற்கும் என்றும், எந்த கூட்டணியிலும் இணையாது என்றும் தெளிவாக தெரிவித்தார்.
இதன்மூலம் தவெக NDA கூட்டணியில் இணையும் என்று சில ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “ஒரு கல்லூரிக்கு சென்று பேசினால் எதுவுமே பேச முடியவில்லை. என்னுடைய கருத்தை கூட சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு நமது விசில் சத்தம் கேட்கிறது” என்று கூறினார்.
தலைவர் விஜய் விரைவில் ஈரோடு வருவார் என்றும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். தவெகவை மட்டுமே அனைத்து கட்சிகளும் தாக்குவதற்கு காரணம், “ஊழலற்ற ஆட்சி தருவேன்” என்ற தலைவரின் அறிவிப்புதான் என்று அவர் சுட்டிக்காட்டினார்.தவெகவில் இணைந்த பிறகு தனது பாக்கெட்டில் மூன்று தலைவர்களின் புகைப்படங்களை வைத்திருந்தபோது, விஜய் அழைத்து “நீங்கள் அம்மா படத்தையே வைத்துக் கொள்ளுங்கள்… அப்போதுதான் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறியதாக செங்கோட்டையன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். “எந்த தலைவர் இப்படிச் சொல்வார்?” என்று கேள்வி எழுப்பி, விஜய்யின் பணிவான மனப்பான்மையை பாராட்டினார்.
