“விஜய் உதவி செய்ய வேண்டும்” – உயிரிழந்த நிர்வாகியின் குடும்பம் கோரிக்கை!

சேலத்தில் நேற்று நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் மயக்கமடைந்து உயிரிழந்த சூரஜ்-ன் உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

vijay in salem

சென்னை :சேலம் மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 13, 2026) தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் (37) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் சேலத்தில் வெள்ளி பட்டறை தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

கூட்டத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு (மாரடைப்பு அல்லது வெயில் தாக்கம் உள்ளிட்ட காரணங்கள்) காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உயிரிழந்த சூரஜின் உடலை குடும்பத்தினர் வாங்க மறுத்துள்ளனர். தவெக சார்பில் உரிய உதவி மற்றும் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதுவரை உடலை பெற மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினரின் கவலைக்கு மத்தியில், “குடும்பத்தை காப்பாற்ற தவெக சார்பில் விஜய் உதவி செய்ய வேண்டும்; இதுவரை யாரும் வந்து சந்திக்கவில்லை, ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை” என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தவெக தரப்பில் உடனடி முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததாகவும் ஏற்கனவே விளக்கம் வெளியிடப்பட்டது. இருப்பினும், குடும்பத்தினரின் இந்த மறுப்பு மற்றும் கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, உடற்கூறு ஆய்வு மற்றும் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.