மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 2ஆவது மாநில மாநாடு மதுரை மாவட்டம், பாரபத்தி பகுதியில் நடைபெறுகிறது. தற்போது, மங்கள வாத்தியத்துடன் தொடங்கியது, தவெக தலைவர் விஜயின் மாநாட்டு மேடைக்கு, அவரின் பெற்றோர் ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் வந்துவிட்டனர்.
இந்த மாநாடு 600 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. மாநாட்டிற்காக 500 பேர் அமரக்கூடிய மேடை, 350 மீட்டர் நீளமுள்ள ராம்ப் வாக் மேடை, 400 கழிவறைகள், 25 கிலோ எடை சுமக்கும் ட்ரோன்கள் மூலம் மருந்து மற்றும் தண்ணீர் விநியோகம், 200-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுக்கள், மற்றும் 2500-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் உள்ளிட்டவை அடங்கும்.
மாநாட்டில் பங்கேற்க லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டு, விஜய்யின் அரசியல் உரை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் போதுமானதாக இல்லாததால் தொண்டர்கள் சில அவதிகளை எதிர்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் முதல் மாநாடு விழுப்புரம், விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு நடைபெற்றது, இது அவரது அரசியல் பயணத்தில் முக்கியமான நிகழ்வாக அமைந்தது. இந்த இரண்டாவது மாநாடு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தவெக-வின் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கான முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மேலும், மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்காக 6 தனி பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, மற்றும் பொதுமக்களுக்கு 7 வழிகளும், விஜய்யின் வருகைக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு தமிழக அரசியல் களத்தில் தவெக-வின் அடுத்தகட்ட நகர்வுகளை வரையறுக்கும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
