சமூக, சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக 100 சதவீதம் உறுதியாக இருப்போம் -விஜய்!

‘மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கை’ என்று பெயர் வைத்ததற்கு காரணமும் அதுதான் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Featured image

சென்னை :மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று (டிசம்பர் 22, 2025) சமத்துவ கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார். மேலும், குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். விழாவில் பங்கேற்ற கிறிஸ்தவ சமூகத்தினருடன் இணைந்து நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றன.

விழாவில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டின் மண் தாயன்பு கொண்ட மண் என்றும், ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்றுதான் என்பதுபோல பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளையும் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் ஊர் தமிழ்நாடு என்றும் வலியுறுத்தினார். வாழ்க்கை முறையும் வழிபாட்டு முறையும் வேறுபட்டாலும், நாம் அனைவரும் சகோதரர்கள் என்று குறிப்பிட்டார். இதனால், தவெகவின் கொள்கை மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை என்று பெயர் பெற்றுள்ளது என்று விளக்கினார்.

சமூக, சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் என்று தெரிவித்த விஜய், அதில் எந்த விதமான சமரசமும் இருக்காது என்று உறுதிப்படுத்தினார். அரசியலுக்கு வந்த பிறகு கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்ததற்கு காரணம், உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும் என்றும், மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கக் கற்றுத் தரும் என்றும் விளக்கினார். அன்பும் கருணையும் கொண்ட “தாய் மனசு”தான் உண்மையான நம்பிக்கையை விதைக்கும் என்றும் கூறினார்.

விழாவின் நிறைவில், “ஒளி ஒன்று பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். நம்பிக்கையுடன் காத்திருங்கள், நல்லதே நடக்கும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அனைத்துப் புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே. Praise the Lord” என்று கூறி, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். நம்பிக்கையுடன் இருந்தால் எந்தப் பிரச்சனையையும் ஜெயிக்க முடியும் என்று தனது பேச்சை நிறைவு செய்தார்.