சென்னை :நேற்று (21-10-2025) காலை 0530மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, 0830 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (22-10-2025) மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழக புதுவை தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இது, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேலும் மேற்கு-வடமேற்கு திசையில், வடதமிழக-புதுவை தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தகவலை தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இன்று 12 மணிநேரத்தில் வலுப்பெறுகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் வாய்ப்பு குறைந்தது எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், 22-10-2025: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
