தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?
முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தேன், அவருடைய அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில் நடைபயிற்சியின் போது முதலமைச்சரை சந்தித்து ஓபிஎஸ் நலம் விசாரித்த நிலையில், தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு திடீரென சென்ற ஓபிஎஸ்-ஐ துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசல்வரை சென்று வரவேற்றார்.
இது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா? அல்லது மரியாதை நிமித்தமான சந்திப்பா? என அரசியல் வட்டாரங்களில் இந்த சந்திப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. அரை மணி நேர சந்திப்பிற்கு பின் முதலமைச்சர் இல்லத்தில் இருந்து ஓ.பி.எஸ் புறப்பட்டார்.
முதலமைச்சரை ஸ்டாலின் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வம் ”முதலமைச்சரின் உடல்நலம் பற்றி விசாரிக்க, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். அரசியல் ரீதியாக எந்தப் பேச்சும் நடக்கவில்லை” என்று கூறியிருக்கிறார். திமுக உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ”அரசியலில் நண்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை என்பதுதான் கடந்தகால வரலாறு. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம்” என்றார.
மேலும், தவெக உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, ‘விஜயுடன் நானும் பேசவில்லை அவரும் பேசவில்லை’ என பதிலளித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்ற தேர்தலில் தே.ஜ.கூட்டணியில் இருந்து வெளியேறிய இ.பி.எஸ், தற்போது இணைந்ததற்கு வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.