உயிரிழந்த பெண் யானை.., வயிற்றில் ஆண் குட்டி.! காக்கத் தவறியது ஏன்?
கோவையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஒரு பெண் காட்டு யானையின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும் நீண்ட நேரம் எந்த அசைவும் இன்றி நின்று கொண்டிருந்ததாக உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், குட்டியுடன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பெண் யானைக்கு 2 கும்கிகள் உதவியுடன் 5 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு 3 நாட்கள் சிகிச்சை அளித்து வந்தது. கடந்த நான்கு நாட்களாக, அந்த தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மே 20-ம் தேதியானந நேற்றைய தினம் யானை உயிரிழந்தது.
நேற்றைய தினம், கோடையின் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு குட்டியுடன் வெளியேறிய தாய் யானை திடீரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, வனத் துறையினர் தீவிர சிகிச்சை அளித்தும் பெண் யானை உயிரிழந்ததாக மாவட்ட வன அலுவலர் தகவல் தெரிவித்தார்.
வயிற்றில் பிளாஸ்டிக் மற்றும் குட்டி யானை :
கோவை மருதமலை பகுதியில் உயிரிழந்த யானை வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததும், யானை சினையாக இருந்ததும் உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், யானையின் உடலைப் பரிசோதித்தபோது, அதன் வயிற்றில் 12 முதல் 15 மாத வயதுடைய ஆண் குட்டி யானை இறந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.
மருதமலை பகுதிகளில்பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்ட பெண் யானையின் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, நச்சுத்தன்மை அதிகமாகி உயிரிழந்ததாக வன கால்நடை மருத்துவர் சுகுமார் தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், வனப்பகுதிகளில் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்கவும் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இந்த நிலையில், சோமையம்பாளையம் ஊராட்சியில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட்டார். பின்னர், குப்பை கொட்டும் இடம் நேற்று மூடப்பட்டது.வனப்பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குட்டி யானையை காக்கத் தவறியது ஏன்?
கோவையில் இறந்த யானையின் வயிற்றில் இருந்த 14 மாத குட்டியை காப்பாற்ற முடியாதது பற்றி வன கால்நடை மருத்துவர் சுகுமார் விளக்கமளிக்கையில், ”யானை வயிற்றில் குட்டி இருப்பதை அறியும் தொழில்நுட்ப வசதிகள் நம்மிடம் இல்லை. யானையின் கர்ப்ப காலம் 18 முதல் 22 மாதங்கள்; 14 மாதமே நிறைவடைந்த குட்டியை காக்க முடியவில்லை.உயிரிழந்த யானையின் மலத்தில் அலுமினியம் foil பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன. அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டதால் யானைக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025