சென்னை :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். “தமிழகத்தில் இரு முனை போட்டி நடக்கிறது. திமுக ஒரு முனையில் நிற்கிறது. மற்ற அனைத்து கட்சிகளும் (அதிமுக, பாஜக உள்ளிட்டவை) டெல்லியின் ஆதிக்கத்துக்கு அடிமையாகி மற்றொரு முனையில் நிற்கின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மேலும் கூறியதாவது, “தமிழ் மக்கள் ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள். சொந்த சுயநலனுக்காக தங்கள் கட்சியை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டையும் டெல்லியிடம் அடகு வைக்க தயங்க மாட்டார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பிய ஸ்டாலின், “தேர்தல் களத்தை சந்திக்கவே டெல்லியின் சம்மதம் தேவை என்ற நிலையில் உள்ளவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கினால், ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “எதிர்க்கட்சித் தலைவரும் அவரது சகாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக? தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தரவா? தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காகவா? மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவா? சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகவா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்த விமர்சனம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக vs அதிமுக-பாஜக கூட்டணி என இரு முனை போட்டி நடைபெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார். இது தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
