பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!
சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது.

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு செயற்குழு கூட்டம் கூடுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில அலகுகளின் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமையகச் செயலாளர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில் அதிமுகவின் அரசியல் உத்திகள், கூட்டணி முடிவுகள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளை மையமாகக் கொண்டு நடைபெற உள்ளது. குறிப்பாக, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்த பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால் இதற்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளது.
மேலும், கூட்டணி அதிருப்தியில் இருக்கும் கட்சியின் மூத்த மற்றும் கடைநிலை நிர்வாகிகளிடம் ஈபிஎஸ் கருத்து கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கான காரணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இன்றைய செயற்குழு கூட்டம், அதிமுகவின் எதிர்கால அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும்.