சென்னை :திமுக அரசு, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணியான SIR (Special Intensive Revision) செயல்பாட்டைத் தடுக்க முயற்சி செய்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “SIR வரக்கூடாது என திமுக துடிக்கிறது. ஆளும் கட்சி அவர்கள்தான்; என்ன பிரச்சினை இருக்கிறது? இறந்தவர்களை வைத்து ஓட்டு பெறுவதே அவர்களுக்கு கை வந்த கலை” என்று சாடினார். SIR மூலம் போலி வாக்காளர்களை நீக்குவதை திமுக எதிர்க்கிறது. ஏனென்றால் அது அவர்களின் தேர்தல் ஏமாற்று உத்திகளை அம்பலப்படுத்தும் என்று பழனிச்சாமி கூறினார்.
நெல் கொள்முதல் விவகாரத்தில் திமுக அரசு அலட்சியமாக செயல்படுவதாக பழனிச்சாமி கடுமையாக விமர்சித்தார். “விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை. போதிய லாரிகள், எடைப்போடும் ஆட்கள், வாகனங்கள் இல்லை. உடனடியாக கொள்முதல் செய்திருந்தால் ஈரப்பதம் பிரச்சினை வராது. திமுக அரசு விவசாயிகளைப் புறக்கணித்து, அவர்களுக்கு துயரம் ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் கூறினார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக நெல் ஈரமானது.ஆனால், அரசு கொள்முதல் நிலையங்களை சரியாக இயக்கவில்லை என்று சாடினார். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு உரிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டதாகவும், திமுக அரசு அதைப் புறக்கணிப்பதாகவும் பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
தமிழக டி.ஜி.பி. நியமனத்தில் திமுக அரசின் தடுமாற்றத்தை பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். “பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. ஓய்வு பெறும் 3 மாதங்களுக்கு முன்பே அடுத்த டி.ஜி.பி. நியமனத்திற்கான பட்டியலை அனுப்ப வேண்டும். மாநில அரசுதான் அந்தப் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டும். ஆனால் திமுக அரசு ஏன் தடுமாறுகிறது? சட்டம்-ஒழுங்கு சீர்கேடு நிலவும் போது டி.ஜி.பி. நியமனத்தில் தாமதம் ஏன்?” என்று அவர் கேட்டார்.
அதிமுக ஆட்சியில் நியமனங்கள் சரியாக நடைபெற்றதாகவும், திமுக அரசு அரசியல் நோக்கத்தில் தாமதப்படுத்துவதாகவும் பழனிச்சாமி கூறினார்.பழனிச்சாமி, “நான் எப்போதும் விவசாயி; அதிமுக எப்போதும் விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுகிறது” என்று தனது பின்னணியை நினைவூட்டினார். திமுக அரசு விவசாயிகளைப் புறக்கணிப்பதாகவும், கொள்முதல், ஈரப்பதம் தளர்வு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றாததாகவும் சாடினார். SIR-ஐ எதிர்க்கும் திமுக, போலி வாக்குகளைப் பாதுகாக்க முயல்கிறது என்றும், விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் என்றும் உறுதியளித்தார்.
