சென்னை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெற்று வரும் நிலையில். மாநாட்டு மேடையில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, இபிஎஸ் படங்கள் இடம்பெறுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அது மட்டுமின்றி, விஜய் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய சீமான், “விஜய் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால், அதில் உறுதியாக இருக்க வேண்டும்,” என்றார். சீமான் மேலும் கூறுகையில், “விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகளாக இருக்கலாம்; எனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகளாக இருக்கிறார்கள். அவர்களது நலனுக்காகவே நாங்கள் போராடுகிறோம்,” என்று தெரிவித்தார்.
மேலும், “மன்னர் ஆட்சி என சொல்லும் விஜய் முதலில் காங்கிரஸ் கட்சியை எதிர்க்க வேண்டும். ஊழல் என தெரிவித்தால், ஊழலுக்காக சிறை சென்ற கட்சியை எதிர்க்க வேண்டும்,” என விமர்சித்தார். அதே சமயம் சீமான், விஜய்யின் கொள்கைகள் தங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானவை என்று கூறி, “கொள்கைக்கு எதிராக இருந்தால் யாராக இருந்தாலும் எதிரிதான்,” என்று முன்பு தெரிவித்திருந்தார்.
இந்த பேட்டியில், விஜய்யின் அரசியல் அணுகுமுறையை கேள்விக்குட்படுத்திய சீமான், தனது தொண்டர்களின் நலனுக்காகவே தான் போராடுவதாகவும், விஜய்யின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மதுரை மாநாட்டு பேனர்களில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றது குறித்து சீமான் கேள்வி எழுப்பியது, தவெகவின் அரசியல் உத்தி குறித்த விவாதங்களை தூண்டியுள்ளது. தொடர்ச்சியாக த.வெ,க குறித்து சீமான் விமர்சனம் செய்து பேசி வரும் நிலையில் மீண்டும் சீமானின் இந்த விமர்சனங்கள், தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையேயான கொள்கை மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
