மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் – த.வெ.க தலைவர் விஜய் வாக்குறுதி!

தவெக ஆட்சி அமைந்த உடன் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.

tvk vijay

சென்னை :மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மகளிர் தின விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கழகத் தலைவர் நடிகர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். பெண்கள் நலன், பாதுகாப்பு, கல்வி, பொருளாதார உதவி ஆகியவற்றில் கழகம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இவ்விழாவில் அவர் தெளிவாக வெளிப்படுத்தினார்.

விஜய் தனது உரையில், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்தால் பெண்கள், குழந்தைகள், முதியோர் நலனுக்காக தனி இலாகா உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இந்தத் துறை தனது நேரடி கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருக்கும் என்றும், இது தேர்தல் முதல் வாக்குறுதியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார். அரசு பணியில் உள்ள பெண்களின் குடும்பங்களுக்கு மட்டும் இத்திட்டத்தில் விலக்கு அளிக்கப்படும்.

இத்தொகை பெண்களின் பொருளாதார சுதந்திரத்தையும் தன்னம்பிக்கையையும் உயர்த்தும் என்று அவர் விளக்கினார்.ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் விஜய் உறுதியளித்தார். இது பெண்களின் இயக்க சுதந்திரத்தை பெரிதும் உயர்த்தும் என்று அவர் குறிப்பிட்டார்.பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கமும், தரமான பட்டுச் சேலையும் ‘அண்ணன் சீராக’ வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார்.

மேலும், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வி இடைநிற்றலைத் தடுக்க, தாய் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘ராணி வேலுநாச்சியார் படை’ உருவாக்கப்படும் என்று விஜய் அறிவித்தார். மாநிலம் முழுவதும் 500 குழுக்களாக இந்தப் படை செயல்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ‘அஞ்சலையம்மாள் அதிவிரைவு நீதிமன்றம்’ அமைக்கப்படும்.

சாதாரண உடையில் இருக்கும் இந்தப் பெண்கள் படை, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று அவர் விளக்கினார்.தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு சார்பில் ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும், உயர்கல்வி பயிலும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்றும் விஜய் தனது உரையில் குறிப்பிட்டார். இத்தகைய திட்டங்கள் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.