உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தவே இந்தியா மீது கூடுதல் வரி – வெள்ளை மாளிகை.!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தவே இந்தியா மீது கூடுதல் வரி என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

Karoline Leavitt

வாஷிங்டன் :உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், அந்த வருமானத்தை ரஷ்யா உக்ரைன் மீதான போருக்கு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% பரஸ்பர வரியுடன் கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டு, மொத்தம் 50% வரியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா இந்த வரி விதிப்பை “நியாயமற்றது மற்றும் காரணமற்றது” எனக் கண்டித்து, ரஷ்யாவுடனான நீண்டகால வர்த்தக உறவுகளை நியாயப்படுத்தியுள்ளது.

மேலும், இந்திய வெளியுறவுத்துறை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைன் போர் நடந்தபோது ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட்,  ”உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தவே இந்தியா மீது ட்ரம்ப் அரசு கூடுதல் வரி விதித்ததாக தெரிவித்துள்ளார். நேட்டோ பொதுச் செயலாளர் உட்பட அனைத்து ஐரோப்பிய தலைவர்களும் இது ஒரு சிறந்த நடவடிக்கை என ஒப்புக்கொள்கின்றனர்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் டிரம்ப் வரவேற்ற சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது.