வாஷிங்டன் :ஆகஸ்ட் 4, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரு விவகாரங்களால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். முதலில், நடிகை சிட்னி ஸ்வீனி நடித்த அமெரிக்கன் ஈகிள் ஜீன்ஸ் விளம்பரம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு தான். அந்த விளம்பரத்தில் “சிட்னிக்கு சிறந்த ஜீன்ஸ் உள்ளது” என்ற வாசகத்துடன் கடந்த ஜூலை 23 – ஆம் தேதி அன்று வெளியாகி புயலை கிளப்பியது.
அந்த விளம்பரத்தில், “ஜீன்ஸ்” (ஆடை) மற்றும் “ஜீன்ஸ்” (மரபணு) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, “என் ஜீன்ஸ் நீலம்” என்று சிட்னி கூறுவது, வெள்ளையர் இன மேலாண்மையை ஆதரிப்பதாக சிலர் விமர்சித்தனர். இதை, “அற்புதமான விளம்பரம்” என்று டிரம்ப் ஆதரித்தது, அவரை விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.
இரண்டாவதாக, டிரம்ப், வெள்ளை மாளிகையின் 27 வயது ஊடக செயலாளர் கரோலின் லெவிட்டைப் பற்றி, ஃபாக்ஸ் நியூஸில் பேசினார். “அவர் முகமும், உதடுகளும், அவை அசையும் விதமும் இயந்திர துப்பாக்கி போல,” என்று கூறியது, பெண்ணை தோற்றத்தின் அடிப்படையில் வர்ணிப்பதாக விமர்சிக்கப்பட்டது. இந்தப் பேச்சு, டிரம்பின் பெண்கள் குறித்த பொருத்தமற்ற கருத்துகளுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்தது.
இந்த இரு சம்பவங்களும் அவரை பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளன.சிட்னி ஸ்வீனியின் விளம்பரம், வெள்ளையர் அழகை முன்னிலைப்படுத்துவதாக X-ல் விமர்சிக்கப்பட்டது. அமெரிக்கன் ஈகிள், “இது ஜீன்ஸ் பற்றிய விளம்பரம் மட்டுமே,” என்று விளக்கியது. ஆனால், சிட்னி குடியரசுக் கட்சி வாக்காளர் என்று தெரிந்ததும், டிரம்ப் ஆதரவு தெரிவித்தார்.
அதைப்போல, கரோலின் லெவிட்டைப் பற்றிய டிரம்பின் கருத்து, அவரது திறமையைப் பாராட்டுவதாக இருந்தாலும், தோற்றத்தை மையப்படுத்தியது பலரை கோபப்படுத்தியது. எனவே, பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். விரைவில் இந்த விமர்சனங்களுக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில் அளித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
