2 வாரங்களில் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன்! டிரம்ப் பேச்சு!

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெற்ற நிலையில், உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

donald trump us

வாஷிங்டன் :வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இடையே நடைபெற்ற முக்கிய சந்திப்பில், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்தப் போர், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகப்பெரிய மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதலாகக் கருதப்படுவதால், இதை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அமெரிக்காவின் மத்தியஸ்தம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

டிரம்ப் இந்தச் சந்திப்பில், உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார், மேலும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என அறிவித்தார்.டிரம்ப் தனது உரையில், “உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரை இரண்டு வாரங்களில் முடிவுக்கு கொண்டு வருவேன். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டதில்லை எனவும் இனி இதுபோன்ற ஒரு போர் நடக்கக் கூடாது,” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “இன்னும் சற்று நேரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச உள்ளேன். புடின் ஒத்துழைப்பு வழங்குவார் என நம்புகிறேன். பேச்சுவார்த்தைகள் கடினமானவை என்றாலும், அவை சாத்தியமானவை. உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும், மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் இதற்கான முடிவு தெரிந்துவிடும்.” இந்த உறுதிமொழி, உக்ரைன் மீதான அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

இந்தச் சந்திப்பில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளின் நிலை குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். “போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உதவ வேண்டும். இன்று கூட ரஷ்யாவின் தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்தது. பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால் உக்ரைனில் தேர்தல் நடத்த முடியாது. எந்தவொரு தலையீடும் இல்லாமல் தேர்தல் நடைபெற வேண்டும்,” என்று ஜெலன்ஸ்கி கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.