ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் அனுமதி கேட்ட இந்தியா!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் குறைக்கப்பட்டதற்கு ஈடுசெய்ய ஈரான் மற்றும் வெனிசுலா எண்ணெய் இறக்குமதியை அனுமதிக்குமாறு இந்தியா அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

India increases oil imports

வாஷிங்டன் :ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவிடம் இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் அனுமதி கேட்டதாக Bloomberg நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆம், இந்திய அதிகாரிகள், அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகளில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை கணிசமாகக் குறைப்பதற்கு பதிலாக, ஈரான் மற்றும் வெனிசுலா போன்ற தடை செய்யப்பட்ட நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கு, அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட்,”உலகில் உள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் இந்தியா எண்ணெய் வாங்கலாம், ஆனால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க கூடாது. அதுதான் எங்கள் நிலைப்பாடு. நாங்கள் இந்தியாவை தண்டிக்க விரும்பவில்லை. ரஷ்யா -உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம், மேலும் இந்தியாவுடனான எங்கள் உறவுகளை வளர்க்க விரும்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், ரஷ்யா, ஈரான், மற்றும் வெனிசுலாவிலிருந்து ஒரே நேரத்தில் எண்ணெய் விநியோகத்தைத் துண்டிப்பது உலகளாவிய எண்ணெய் விலைகளில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தும் என்ற இந்தியாவின் கவலை உள்ளது.

இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக இருப்பதால், அதன் எரிசக்தி பாதுகாப்பிற்காக பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உள்ளது. இந்த சூழலில், ஈரான், வெனிசுலா ஆகிய நாடுகளிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா ஒரே நேரத்தில் நிறுத்தினால், உலகளாவிய சந்தை கடுமையாக பாதிக்கும் என்று எச்சரித்ததாக  தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் தடைகள் காரணமாக இந்தியா ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது. ஆனால், முன்னதாக ஈரான் இந்தியாவின் முதன்மையான எண்ணெய் வழங்குநர்களில் ஒருவராக இருந்தது. இந்தியாவின் இந்த கோரிக்கை, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகளாவிய எண்ணெய் விலை நிலையாக இருப்பதை உறுதி செய்யும் முயற்சியாகக் கருதப்படுகிறது.