ஈரான் :மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல் இப்போது ஐந்தாவது நாளை எட்டியிருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு ‘ரோரிங் லயன்’ மற்றும் ‘எபிக் ஃப்யூரி’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் பறந்து, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள், விமானத் தாக்குதலைத் தடுக்கும் அமைப்புகள், ஆயுதங்கள் வைக்கப்பட்ட கிடங்குகள் ஆகியவற்றை தொடர்ந்து தாக்கி வருகின்றன.
டெஹ்ரான் உள்ளிட்ட பெரிய நகரங்களில் வானத்தில் இருந்து விழும் குண்டுகளின் சத்தம் கேட்டு மக்கள் பயந்து வீட்டுக்குள் ஒதுங்கியிருக்கிறார்கள்.தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. டயர், சிடான் போன்ற பகுதிகளில் ஹிஸ்புல்லாவின் சுமார் 60 ரகசிய இடங்கள் ஒரே நேரத்தில் இஸ்ரேல் படைகளால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. அங்கு ஆயுதங்கள் சேமிக்கப்பட்ட கிடங்குகள், ராக்கெட் ஏவும் தளங்கள், தளபதிகள் கூடும் அறைகள், தகவல் தொடர்பு அமைப்புகள் எல்லாம் குண்டு வீச்சில் சிதறடிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் இஸ்ரேல் எல்லைக்குள் ராக்கெட் தாக்குதல் நடத்துவதற்கும், துருப்புகளைத் தாக்க திட்டமிடுவதற்கும் பயன்பட்டதாக இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது.
ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டத்துக்கு பெரிய அடி விழுந்துள்ளது. ‘மின்சாதெய்’ என்ற ரகசிய இடத்தில் அணு ஆயுதங்களுக்குத் தேவையான முக்கிய பொருட்களை உருவாக்கும் அறிவியலாளர்கள் செயல்பட்டு வந்தனர். இஸ்ரேல் உளவுத்துறை இந்த இடத்தை முன்கூட்டியே கண்டறிந்து, துல்லிய தாக்குதல் நடத்தி முழுமையாக அழித்துவிட்டது. இதனால் ஈரானின் அணு ஆயுத உருவாக்கும் முயற்சி கணிசமாக பின்னடைந்துள்ளது.
அமெரிக்கா சென்ட்ரல் கமான்ட் தளபதி பிராட் கூப்பர் கூறியதாவது: இந்த நடவடிக்கை தொடங்கி 100 மணி நேரத்தில் 2000-க்கும் மேற்பட்ட இலக்குகளை 2000-க்கும் அதிகமான வெடிபொருட்களால் தாக்கியுள்ளோம். ஈரானின் விமானப் பாதுகாப்பு அமைப்புகள் பெருமளவு அழிந்துவிட்டன. நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஏவு தளங்கள், ட்ரோன்கள், 17 கப்பல்கள் உட்பட கடற்படை பலம் கிட்டத்தட்ட முடங்கியுள்ளது. இப்போது ஹார்முஸ் ஜலசந்தி, அரபியன் கடல், ஓமன் வளைகுடா பகுதிகளில் ஈரானின் எந்தக் கப்பலும் இயங்கவில்லை. “நாங்கள் நிறுத்த மாட்டோம்” என்று அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
ஈரான் வானத்தில் இப்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் முழு கட்டுப்பாட்டில் உள்ளன. B-2, B-1, B-52 போன்ற கனரக போம்பர் விமானங்கள் ஈரானின் ஆழமான பகுதிகளுக்குள் சென்று ஏவுகணை தயாரிப்பு தளங்கள், கட்டுப்பாட்டு மையங்கள், ரகசிய ஆயுத இடங்கள் ஆகியவற்றை துல்லியமாகத் தாக்கியுள்ளன. ஆனால் ஈரானின் பதிலடி தாக்குதல்களால் அமெரிக்க ராணுவ ரிசர்வ் பிரிவைச் சேர்ந்த நான்கு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் கேப்டன் கோடி கோர்க், சார்ஜென்ட் நோவா டீட்ஜென்ஸ், சார்ஜென்ட் நிகோல் அமோர், டெக்ளான் கோடி ஆகியோர்.
இந்தப் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ஈரான் பல பகுதிகளில் பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் இராணுவ இலக்குகளை முழுமையாக அடையும் வரை தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என்று தொடர்ந்து அறிவித்து வருகின்றன. இந்த நிலைமை தொடர்ந்தால் மத்திய கிழக்கு முழுவதும் பெரிய போராக மாறும் அபாயம் உள்ளது. உலக நாடுகள் இதை மிகுந்த கவலையுடன் கவனித்து வருகின்றன.
