வாஷிங்டன் :இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வரிவிதிப்பு தொடர்பான பதற்றம் தணியாமல் தொடர்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது உறவுகள் குறித்து ஒரு பெரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவது தனக்கு ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். தான் எப்போதும் பிரதமர் நரேந்திர மோடியுடன் நட்பாக இருப்பேன், அதில் பிரச்சினை இல்லை என்றும் ஓவல் அலுவலகத்தில் நடந்த பேட்டியில் கூறியுள்ளார்.
தற்போதைய பதற்றம் இருந்தபோதிலும், மோடியும் நானும் நண்பர்களாகவே இருப்போம் என்றும் டிரம்ப் கூறினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ”அவர் ஒரு சிறந்த பிரதமர். அவர் சிறந்தவர், ஆனால் அவர் இப்போது செய்வது எனக்குப் பிடிக்கவில்லை.
ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இரு நாடுகளுக்கும் இடையே சில நேரங்களில் இதுபோன்ற தருணங்கள் வருவதால் இதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை” என்றார். இந்திய – சீன உறவு குறித்து பதிவிட்ட ஒருநாள் கழித்து இந்தியாவையும் மோடியையும் புகழ்ந்து அமெரிக்க அதிபர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
