டெல்லி :இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே வரலாற்று சாதனை நிகழ்ந்துள்ளது . ஏன்னென்றால், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. இது உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இரு தரப்புக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் இந்த ஒப்பந்தம், கிட்டத்தட்ட 2 பில்லியன் மக்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான சந்தையை உருவாக்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியக் குழு மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இணைந்து இந்த மாபெரும் சாதனையை அறிவித்துள்ளனர்.இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் BMW, Mercedes-Benz போன்ற ஆடம்பர கார்களின் இறக்குமதி வரி படிப்படியாக 40 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 110 சதவீதம் வரை உள்ள வரி, 10 சதவீதமாக குறைவதால் இந்திய சந்தையில் ஆடம்பர கார்கள் மலிவாகக் கிடைக்கும்.
மேலும், ஐரோப்பிய ஒயின், சாக்லேட் போன்ற பொருள்களுக்கும் வரி சலுகைகள் வழங்கப்படும். இதனால் இந்திய நுகர்வோருக்கு பெரும் நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பிலும் புதிய மைல்கல்! கடல்சார் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உறவை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. உலக அளவில் ஏற்படும் புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், இந்த ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கும் புதிய பலத்தை அளிக்கும்.
பிரதமர் மோடி இந்த ஒப்பந்தத்தை “வளர்ச்சிக்கான ப்ளூபிரிண்ட்” என்று பெருமிதத்துடன் வர்ணித்தார். “இரு சக்திவாய்ந்த தேசங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது வெறும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல… இரு தேசங்களுக்கு வளர்ச்சிக்கான ப்ளூபிரிண்ட். இருவருக்குமான உணர்வு உலக நன்மைக்கானது” என்று அவர் உரையாற்றினார்.
இது உலகப் பொருளாதாரத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.இந்தியாவின் ஏற்றுமதி பொருள்களான ஜவுளி, நகை, மருந்துகள், பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய சந்தையில் பெரும் வாய்ப்புகள் திறக்கப்படும். 2032-ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பிய ஏற்றுமதி இரு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 ஆண்டுகளாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் இப்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், உலக அளவில் இந்தியாவின் வர்த்தக வலிமை மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரத்துக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.
