பொலிவியாவில் பயங்கர விமான விபத்து – 15 பேர் பலி, சாலையில் சிதறிய பணம்!

பொலிவியாவில் கரன்சி நோட்டுகளை எடுத்துச் சென்ற ராணுவ சரக்கு விமானம் விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bolivia Plane Crash

பொலிவியா :(Bolivia) ராணுவ சரக்கு விமானம் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர், 30 பேர் படுகாயமடைந்தனர். விமானத்தில் பொலிவியன் பொலிவியானோ (Bolivianos) கரன்சி நோட்டுகள் ஏராளமாக ஏற்றப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விமானம் தலைநகர் லா பாஸ் (La Paz) அருகேயுள்ள எல்ஆல்டோ (El Alto) விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் பறக்கும் பாதையில் இருந்து விலகிச் சென்றது. கட்டுப்பாட்டை இழந்த விமானம் அருகிலுள்ள சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி நொறுங்கியது. இதனால் சாலையில் சென்ற வாகனங்களும் பெரிதும் சேதமடைந்தன.விபத்து நடந்த உடனேயே விமானத்தில் இருந்து சிதறிய பண நோட்டுகள் சாலை முழுவதும் பறந்தன.

இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் உடனடியாக ஓடி வந்து, போட்டி போட்டுக் கொண்டு பணத்தை அள்ளிச் சென்றனர். சிலர் பணத்தை எடுத்து ஓடுவதற்கு முன் உதவி செய்ய முயன்றனர் என்றும், ஆனால் பெரும்பாலானோர் பணத்தை மட்டுமே கவனித்தனர் என்றும் கண்கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.விபத்தில் உயிரிழந்த 15 பேரில் பெரும்பாலானோர் விமானத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள்.

படுகாயமடைந்த 30 பேரில் சிலர் சாலையில் சென்ற வாகன ஓட்டுநர்களும் அடங்குவர். பொலிவிய ராணுவம் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கியது. விபத்து காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் பொலிவியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதறிய பணத்தை மக்கள் அள்ளிச் சென்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ராணுவ சரக்கு விமானத்தில் ஏன் இவ்வளவு பெரிய அளவில் கரன்சி நோட்டுகள் ஏற்றப்பட்டிருந்தன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.