இஸ்ரேல் :மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் 4 நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து நடத்திய வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் ஈரானில் மட்டும் 1,097 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,164 ஆக உயர்ந்துள்ளது. லெபனானில் 40 பேர், இஸ்ரேலில் 11 பேர், ஈராக்கில் 2 பேர், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் தலா 3 பேர், பஹ்ரைன் மற்றும் ஓமனில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் தரப்பிலிருந்து பதிலடி தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பஹ்ரைனில் உள்ள ஜூஃபைர் அமெரிக்க கடற்படைத் தளம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அமெரிக்க ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் மூத்த உதவியாளர் முகமது மொக்பர், “அமெரிக்கர்கள் மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஈரான் விரும்பும் வரை போரைத் தொடரும்” என்று கூறியுள்ளார். ஹார்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில் எண்ணெய் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். “எந்த சூழலிலும் உலக நாடுகளுக்கு எரிசக்தி வழங்கப்படுவதை அமெரிக்கா உறுதி செய்யும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
கப்பல்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் போர் காரணமாக உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி, உயிரிழப்புகள் அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. சர்வதேச சமூகம் உடனடியாக இடைநிலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. போர் தொடர்ந்தால் உலகப் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்திக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
