ஈரானில் அமெரிக்கா நடத்தவிருந்த 'ரகசிய ஆபரேஷன்'...உண்மையை உடைத்த டிரம்ப்!

எங்களுக்கு எந்த ஒப்பந்தமும் தேவையில்லை, நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் ஈரான் யுரேனியத்தை அமெரிக்கா கைப்பற்றும் என்று ட்ரம்ப் ஓப்பனாக மிரட்டியுள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் அணு உலைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெறும் குண்டுவீச்சு மூலம் அழிப்பதற்கு பதிலாக, அமெரிக்க ராணுவ வீரர்களை நேரடியாக அனுப்பி கைப்பற்றி கொண்டு வருவது தொடர்பான ரகசியத் திட்டம் பரிசீலிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த ஆப்பரேஷன் சாதாரண தாக்குதல் அல்ல. அமெரிக்க படைகள் ஈரான் எல்லைக்குள் நுழைந்து, அணு தளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அங்கிருந்த யுரேனியத்தை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டியிருக்கும். இதற்காக வீரர்கள், கனரக ராணுவ வாகனங்கள் மற்றும் விமானம் தேவை என மதிப்பிடப்பட்டது.

ஆனால் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என பென்டகன் அதிகாரிகள் எச்சரித்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்பரேஷன் குறைந்தது இரண்டு வாரங்கள் நீடிக்கலாம் என்றும், ஈரானின் எதிர் தாக்குதலால் பெரிய உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கண்டறியப்பட்டதால், தற்போதைக்கு அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ட்ரம்ப், "1980-ல் அமெரிக்க பணயக்கைதிகளை மீட்க நடந்த தோல்வியடைந்த நடவடிக்கை போல இது மாறக்கூடாது. அதனால்தான் இப்போது ராணுவத்தை நிறுத்தியுள்ளோம். இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணியின் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானின் அரசியல் சூழல் மேலும் பதற்றமடைந்துள்ளது. புதிய தலைமையின் கீழ் ஈரான் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுபுறம், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான Strait of Hormuz பகுதியில் ஏற்பட்ட பதற்றம் உலக பொருளாதாரத்தையே பாதிக்கிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தப் பாதையில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

டிரம்ப் வெளிப்படுத்திய இந்த ரகசியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், அது மத்திய கிழக்கு பிராந்தியத்தையே அல்லாமல் உலக அரசியல் மற்றும் பொருளாதார சமநிலையையே மாற்றியிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஈரானில் அமெரிக்கா நடத்தவிருந்த 'ரகசிய ஆபரேஷன்'...உண்மையை உடைத்த டிரம்ப்!