டெல்லி :ஐ.சி.சி. 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026 பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளும் அடங்கும்.இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 7-ஆம் தேதி அமெரிக்காவை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.
அதைத் தொடர்ந்து பிப்ரவரி 12-ஆம் தேதி நமீபியாவுடன் டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறுகிறது. இறுதியாக, லீக் சுற்றில் நெதர்லாந்துடன் பிப்ரவரி 18-ஆம் தேதி அகமதாபாத்தில் மோதுகிறது.இந்த உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி இன்று (டிசம்பர் 20, 2025) அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், அக்சர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களுக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. அவர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர். இந்த அணி அமைப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
