வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 35 பந்துகளில் சதம் விளாசி உலகம் முழுவதும் வைபவ் சூர்யவன்சி ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார்.

ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி பெயர் தான். நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இவர் செய்த சம்பவம் தான் அதற்கு முக்கியமான காரணம். பீகாரை சேர்ந்த 14 வயதான வைபவ் சூர்யவன்சி இவ்வளவு இளம் வயதில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
ராஜஸ்தான் அணி அவரை ரூ.1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்த நிலையில், தொகைக்கு ஏற்றது போல அதிரடியான ஆட்டத்தை நேற்று காண்பித்தார் என்று சொல்லலாம். 18 வருட ஐபிஎல்-ல் அதிவேக 100 அடித்த முதல் இந்தியர் என்ற ஆகப்பெரும் சாதனையை நேற்று அசால்டாக செய்து காட்டிவிட்டார். சர்வதேச டி20 போட்டி தொடர்களில் இளம் வயதில் 100 அடித்த வீரர் என்பது உட்பட பல சாதனைகளை படைத்தது அசத்தியுள்ளார்.
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி ?
வைபவ் சூர்யவன்ஷி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது இளம் கிரிக்கெட் வீரர். இவர் தனது 12 வயதில், 2023-24 ரஞ்சி கோப்பை தொடரில் பீகார் அணிக்காக விளையாடி அறிமுகமாகி, இந்தியாவின் மிக இளம் ரஞ்சி வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அந்த தொடரில் மும்பை அணிக்கு எதிராக 60 ரன்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
U19 சாதனை: வைபவ், இந்திய U19 அணிக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒரு இளையோர் ஒருநாள் போட்டியில் 58 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து சதமடித்து சாதனை படைத்தார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி ஐபிஎல் போட்டிகளிலும் சாதனைகளை படைத்தது உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார். இப்படி சிறப்பாக விளையாடினாள் அடுத்ததாக அவர் சர்வதேச அளவில் இந்தியாவுக்காக கூட விளையாட வாய்ப்புகள் கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பரிசு
ஐபிஎல் போட்டியில் அவருடைய அசத்தலான பேட்டிங்கிற்கு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த சூழலில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அவருடைய சாதனைகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த பரிசு தொகை வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர், வைபவின் திறமை மற்றும் அர்ப்பணிப்பு மாநிலத்தின் இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும் எனவும் பாராட்டி பேசியுள்ளார்.