டெல்லி :தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-2 என்று ஒயிட்வாஷ் ஆனது இந்திய கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்சூரியனில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 32 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் வெல்ல முடியாத மோசமான சாதனை தொடர்கிறது.
போட்டி முடிந்த பின் இந்திய தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியுடன் பேசினார். “நான் பயிற்சியாளராக இருந்தபோதுதான் இங்கிலாந்தில் தொடரை சமன் செய்தோம், சாம்பியன்ஸ் டிராபி வென்றோம், ஆசியக் கோப்பையை கைப்பற்றினோம். ஆனால் இந்தத் தோல்விக்கு அனைவருமே பொறுப்பு. என்னிடமிருந்து தொடங்கி அனைவரின் மீதும் தவறு இருக்கிறது” என்று திறந்த மனதுடன் ஒப்புக்கொண்டார்.
கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு டெஸ்ட் போட்டிகளில் நம்பர்-3 இடத்தில் மட்டும் 7 வெவ்வேறு வீரர்களை இந்திய அணி பரிசோதித்திருக்கிறது. ஷுப்மான் கில், சாய் சுதர்சன், கருண் நாயர், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர் என ஏழு பேர் அந்த இடத்தில் களமிறங்கியுள்ளனர். இந்த நிலையற்ற தன்மையே தொடர்தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக நம்பர்-3 இடத்தில் யாரும் நிலைத்து நிற்க முடியவில்லை என்பது இந்திய பேட்டிங் வரிசையின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.
“இது ஒரு குழுவின் தோல்வி, தனி நபர்களின் தோல்வி அல்ல” என்று கம்பீர் வலியுறுத்தியது அணியில் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும், இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்க தான் சரியான நபரா என்ற கேள்விக்கு கௌதம் கம்பீர் பதில் அளித்தார். இது குறித்து பேசிய அவர் ” அதை முடிவு செய்ய வேண்டியது பிசிசிஐ தான். நான் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் எனது முதல் செய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய கிரிக்கெட் தான் முக்கியம், நான் அல்ல என்று சொல்லி இருந்தேன். இப்போதும் அதையே சொல்கிறேன்”.
