டெல்லி :ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், அடுத்து வரும் IPL 2026 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் தனது பெயரைப் பதிவு செய்யவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெறும் இந்த மினி ஏலத்தில் மொத்தம் 1,355 வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில், மேக்ஸ்வெல்லின் பெயர் இல்லாதது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2012-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் IPL-யில் அறிமுகமான மேக்ஸ்வெல், 14 ஆண்டுகளாக இந்த லீக் ரசிகர்களுக்கு “பிக் ஷோ” என்ற பட்டத்தைத் தக்க வைத்திருந்தவர். இப்போது அவர் தானாகவே ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.
கடந்த 2025 சீசன் மேக்ஸ்வெல்லுக்கு மிக மோசமானதாக அமைந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது, ஆனால் 9 போட்டிகளில் வெறும் 78 ரன்கள் மட்டுமே அடித்தார், 4 விக்கெட்டுகள் எடுத்தார். நடுவில் வலது கை நடுவிரல் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சீசனின் பாதியிலேயே வெளியேறினார். 2024 சீசனும் அவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. இதனால் பஞ்சாப் அணி அவரை விடுவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் அவரை மீண்டும் ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், மேக்ஸ்வெல் தானே பின் வாங்கியது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
IPL வரலாற்றில் மேக்ஸ்வெல்லை மறக்க முடியாது. 141 போட்டிகளில் 2,819 ரன்கள் (சராசரி 26.8, ஸ்ட்ரைக் ரேட் 157), 41 விக்கெட்டுகள். 2014-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 542 ரன்கள் (6 அரைசதங்கள்), 2021-ல் RCB அணிக்காக 513 ரன்கள் (6 அரைசதங்கள்) என்று பல சீசன்களில் புயலாக வீசினார். 2020-ல் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்தவர். ஆனால் கடைசி இரண்டு சீசன்களில் மொத்தம் 100 ரன்களுக்கு கீழே அடித்தது அவரது இமேஜை சற்று பாதித்தது. தற்போது 37 வயதாகும் மேக்ஸ்வெல், உடல் தகுதி மற்றும் மன அழுத்தத்தை காரணம் காட்டி ஓய்வு எடுக்க முடிவு செய்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
தனது இன்ஸ்டாகிராமில் மேக்ஸ்வெல் உருக்கமாக எழுதியுள்ளார் “பல மறக்க முடியாத சீசன்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஏலத்தில் என் பெயரை வைக்கவில்லை என்று முடிவு செய்தேன். இது பெரிய முடிவு, ஆனால் இந்த லீக் எனக்கு கொடுத்த அனைத்துக்கும் நன்றியுடன் எடுக்கப்பட்டது. IPL என்னை கிரிக்கெடராகவும், மனிதராகவும் வடிவமைத்தது. உலகத் தரம் வாய்ந்த இணை வீரர்களுடன் விளையாடினேன், இந்திய ரசிகர்களின் உணர்ச்சிமயமான ஆதரவைப் பெற்றேன். இந்தியாவின் ஆற்றல், நினைவுகள், சவால்கள் என்னுடன் என்றும் இருக்கும். ஆண்டுகளாக உங்கள் அன்புக்கு நன்றி… இன்னும் சந்திப்போம்!” என்று முடித்திருக்கிறார்.
