டக்கெட் முன்பு ஆவேசமாக கத்திய முகமது சிராஜ்.! அபராதம் விதித்த ஐசிசி.!
பென் டக்கெட்டை விக்கெட்டை வீழ்த்திய பிறகு முகமது சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடியதற் குஐசிசி சிராஜுக்கு அபராதம் விதித்துள்ளது.

லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. இந்திய அணி சார்பாக வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வெற்றியா? தோல்வியா? என்ற பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்திற்கு முன்னர், இந்திய அணிக்கு ஷாக் கொடுத்துள்ளது ஐசிசி.
அது என்னவென்றால், லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் நான்காவது நாளில் பென் டக்கெட்டை விக்கெட்டை வீழ்த்திய பிறகு முகமது சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடியதற் குஐசிசி சிராஜுக்கு அபராதம் விதித்துள்ளது. மேலும் அவரது ஒழுக்கப் பதிவில் ஒரு டிமெரிட் புள்ளி (demerit point) சேர்க்கப்பட்டது.
இது கடந்த 24 மாதங்களில் அவரது இரண்டாவது விதிமீறலாகும், இதற்கு முன் 2024 டிசம்பர் 7-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (அடிலெய்டு) ஒரு டிமெரிட் புள்ளி பெற்றிருந்தார். இது 24 மாத காலத்தில் சிராஜின் இரண்டாவது டீமெரிட் புள்ளியாகும், இதன் மூலம் அவரது மொத்த டீமெரிட் புள்ளிகள் இரண்டாக உயர்ந்துள்ளன.
ஐசிசி விதிகளின்படி, 24 மாதங்களுக்குள் ஒரு வீரர் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட டிமெரிட் புள்ளிகளைப் பெற்றால், அது இடைநீக்கப் புள்ளிகளாக மாற்றப்பட்டு, ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும்.
ஆனால், சிராஜ் இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு, எமிரேட்ஸ் ஐசிசி எலைட் பேனல் மேட்ச் ரெஃபரி ரிச்சி ரிச்சர்ட்சனால் முன்மொழியப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொண்டதால், முறையான விசாரணை தேவையில்லை. இந்தக் குற்றத்திற்கு கள நடுவர்களான பால் ரெய்ஃபெல், ஷர்ஃபுத்வுலா இப்னே ஷாஹித், மூன்றாவது நடுவர் அஹ்சன் ராசா மற்றும் நான்காவது நடுவர் கிரஹாம் லாய்ட் ஆகியோரால் குற்றம் சுமத்தப்பட்டது.