ஐபிஎல் 2026! முஸ்தாபிசுர் ரஹ்மானை நீக்குங்க ..கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ வலியுறுத்தல்!

இந்த ஆண்டு, நைட் ரைடர்ஸ் வங்கதேசத்தின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முஸ்தாபிசுர் ரஹ்மான் அணியில் ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்த நிலையில், இந்து தேசியவாத குழுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Mustafizur Rahman

டெல்லி :வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, IPL 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இடம்பெற்றுள்ள வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு BCCI உத்தரவிட்டுள்ளது. BCCI செயலாளர் தேவஜித் சைகியா, ANI செய்தி நிறுவனத்திடம், “சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு KKR அணியிடம் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்கச் சொல்லியுள்ளோம். மாற்று வீரருக்கு அனுமதி கோரினால் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

முஸ்தபிசுர் ரஹ்மான் இந்த மினி ஏலத்தில் ரூ.9.2 கோடிக்கு KKR அணியால் வாங்கப்பட்டார். இந்த ஆண்டு IPL-யில் ஒரே வங்கதேச வீரர் அவர்தான். வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் பாதுகாப்பின்மை மற்றும் மதவாத வன்முறைக்கு ஆளாகியுள்ள நிலையில், அவரது அணியில் இடம்பெறுவது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து தேசியவாத குழுக்கள் இதை வன்மையாகக் கண்டித்து வருகின்றன.KKR உரிமையாளர் ஷாருக்கான் “தேசத்துரோகி”, “தேச விரோதி” என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

அக்ரா மாவட்ட இந்து மகாசபா தலைவர் மீரா ரத்தோர், ஷாருக்கானின் நாக்கைத் துண்டிப்பவருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளார். “வங்கதேசத்தில் இந்து சகோதரர்கள் கொல்லப்படும் போது, அவர் வங்கதேச வீரரை வாங்குகிறார்” என்று அவர் குற்றம்சாட்டினார்.முன்னாள் உத்தரப் பிரதேச எம்.எல்.ஏ. சங்கீத் சோம், “இந்துக்கள் கொல்லப்படும் போது வங்கதேச வீரரை வாங்கும் ஷாருக்கான் தேசத்துரோகி.

இந்த நாட்டில் வாழ தகுதியில்லை” என்று பொதுக்கூட்டத்தில் பேசினார். உத்தவ் தாக்கரேயின் ஷிவசேனா (UBT) செய்தித் தொடர்பாளர் ஆனந்த் துபே, “முஸ்தபிசுரை விடுவித்தால் ஷாருக்கானுக்கு மரியாதை கிடைக்கும். அவர் சம்பாதிக்கும் பணம் தீவிரவாதிகளுக்கு செல்லும்” என்று கூறினார்.ஆரம்பத்தில் BCCI வட்டாரம் “அரசிடம் இருந்து தடை உத்தரவு இல்லை” என்று கூறியது.

ஆனால் சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு BCCI தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளது. முஸ்தபிசுர் ரஹ்மான் இந்த சீசனில் KKR அணியில் இடம்பெற மாட்டார் என்று தெரிகிறது.இந்தச் சர்ச்சை வங்கதேசத்தில் நடக்கும் வன்முறை மற்றும் இந்தியாவில் எழுந்த தேசியவாத உணர்வுகளை பிரதிபலிக்கிறது. IPL அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. KKR அணி மாற்று வீரரைத் தேர்வு செய்யுமா என்பது கவனம் பெற்றுள்ளது.