கொழும்பு :பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), டி20 உலகக் கோப்பை 2026-இல் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொழும்பில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா – பாகிஸ்தான் மோதலை புறக்கணிப்பதாக PCB தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு தனது அணிக்கு உலகக் கோப்பையில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது, ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு மட்டும் அனுமதி மறுத்துள்ளது.
இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.ஐசிசி இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டும் விளையாட மறுப்பது கிரிக்கெட்டின் நேர்மை, சமத்துவம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு எதிரானது என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இத்தகைய முடிவு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் அணி இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில் கடும் தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் இந்த புறக்கணிப்பு முடிவை ஆதரித்துள்ளார். ஐசிசியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பேசிய அவர், “ஐசிசி தூங்கிவிட்டதா? ஆசிய கோப்பை ஹைப்ரிட் மாடலில் நடத்தப்பட்டபோது ஐசிசி தூங்கியிருந்ததா? இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் விளையாட மறுத்தபோது ஐசிசி தூங்கியிருந்ததா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்தியாவுடன் பிலேட்ரல் தொடர்கள் நடைபெறாதது அரசியல் காரணங்களால் என்றும், ஐசிசி அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.ஆசிய கோப்பை 2025-இல் இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்ததையும், வெற்றி கோப்பையை ஏற்க மறுத்ததையும் கம்ரான் அக்மல் சுட்டிக்காட்டினார். “இந்தியா எங்களை மதிக்கவில்லை. ஐசிசி அப்போது ஏன் அமைதியாக இருந்தது? பாகிஸ்தானின் முடிவை மதிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பது நியாயமானது என்று அவர் கருதுகிறார்.
இந்த புறக்கணிப்பால் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்தாகும் வாய்ப்பு உள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும். ஐசிசியின் வருவாயில் பெரும் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணிக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என்றும், இது முழு தொடரையும் பாதிக்கலாம் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். வரும் 48 மணி நேரத்தில் இந்த விவகாரத்தில் தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
