டெல்லி :வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ரஸ்ஸல், 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக ஐபிஎல்லில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2014 முதல் 2024 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக 140 போட்டிகளில் விளையாடிய ரஸ்ஸல், 2 முறை சாம்பியன் பட்டம் (2014, 2024) வென்றவர். 37 வயதான இவர், ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களில் ஒருவராகவும், 2019-ல் மோஸ்ட் வேல்யூவபிள் பிளேயராகவும் திகழ்ந்தவர்.
கேகேஆர் அணி 2026 ஏலத்துக்கு முன் ரஸ்ஸலை ரிட்டெய்ன் செய்யவில்லை. இதனால் அவர் மீண்டும் ஏலத்தில் கலந்து கொள்வார் அல்லது வேறு அணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஸ்ஸல் தானே ஓய்வு முடிவை அறிவித்தார். திடீரென அவர் ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனையடுத்து, ஓய்வு குறித்து அவர் பேசியுள்ளார். “பெரிய லீக் என்பதால் எப்போதும் சவாலாக இருக்கிறது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் எல்லாவற்றையும் சமாளிப்பது, உடலை நிர்வகிப்பது, பயணங்கள், மீட்சி – இவை எல்லாம் எனக்கு மிகவும் கடினமாகிவிட்டன” என்று கிரிக்பஸ்ஸிடம் தெரிவித்தார்.
ஓய்வு பெற்றாலும் கேகேஆருடனான உறவு முறியவில்லை. ரஸ்ஸல் இனி கேகேஆர் அணியின் ‘பவர் கோச்’ ஆக பணியாற்றுவார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகியவற்றில் தனது அனுபவத்தையும் ஆற்றலையும் இளம் வீரர்களுக்கு பகிர்ந்து வார் என்று கேகேஆர் நிர்வாகம் அறிவித்துள்ளது. “பவர் கோச் என்ற பெயரே எனக்கு பொருத்தமாக இருக்கிறது” என்று ரஸ்ஸல் சிரித்துக் கூறினார்.
ரஸ்ஸலின் ஓய்வு அறிவிப்பு ஐபிஎல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏலத்தில் 18 கோடி ரூபாய் பர்ஸ் கிடைத்தாலும், கேகேஆர் ரஸ்ஸலை வீரராக இழந்துவிட்டது. அதே நேரம் அவரது அனுபவமும் மார்க்கெட்டிங் மதிப்பும் அணிக்கு தொடர்ந்து கிடைக்கும் என்பதால், கேகேஆர் ரசிகர்கள் இந்த மாற்றத்தை ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர். டிசம்பர் 16-ல் அபுதாபியில் நடக்கும் ஏலத்தில் ரஸ்ஸல் வீரராக இல்லாமல், கோச்சிங் பெஞ்சில் அமர்ந்திருப்பார்.
