டெல்லி :இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் (ODI) அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா, 2027 உலகக் கோப்பை வரை தொடர வேண்டுமா இல்லையா என்ற விவாதம் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் சூடு பிடித்துள்ளது. 2027-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையின்போது ரோஹித் சர்மாவுக்கு 40 வயது ஆகியிருக்கும், இது ஒரு கிரிக்கெட் வீரருக்கு நீண்டகால உயர்மட்ட செயல்பாட்டைத் தக்கவைப்பதற்கு சவாலாக இருக்கலாம்.
இருப்பினும், அவரது தற்போதைய உடற்தகுதி, பேட்டிங் திறன் மற்றும் தலைமைப் பண்பு ஆகியவை, அவர் இன்னும் மூன்று ஆண்டுகள் உயர்மட்ட கிரிக்கெட்டில் தொடர முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன. ஆனால், வயது மற்றும் இளம் வீரர்களின் எழுச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவர் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பை வரை கேப்டனாகவும், வீரராகவும் தொடர வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவரது ஆக்ரோஷமான பேட்டிங் பாணி, அழுத்தமான சூழல்களில் அமைதியாக முடிவுகளை எடுக்கும் திறன் மற்றும் இளம் வீரர்களை வழிநடத்தும் தலைமைத்துவம் ஆகியவை இந்த ஆதரவுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவை இறுதிப் போட்டி வரை வழிநடத்தியதும், 2024 டி20 உலகக் கோப்பையில் அணியை வெற்றி பெற வைத்ததும் அவரது தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன. முன்னாள் வீரர்கள், ரோஹித்தின் அனுபவம் இந்திய அணிக்கு ஒரு முக்கிய பலமாக இருக்கும் என்று கருதுகின்றனர்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷி குறித்து பேசுகையில், “2027 உலகக் கோப்பை வரை இந்திய ODI கேப்டனாக ரோஹித் தொடர வேண்டும். ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மாற்று, வேறு எவரும் இல்லை. அவரது பேட்டிங், இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் கேப்டன்ஷி மிகவும் முக்கியம்,” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
ரோஹித்தின் ஆட்டமும், மைதானத்தில் அவர் காட்டும் தலைமைப் பண்புகளும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவதாக ராயுடு வலியுறுத்தினார். மேலும், ரோஹித்தின் அனுபவமும், அணியை ஒருங்கிணைக்கும் திறனும், இளம் வீரர்களுக்கு உதாரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது, எனவே, அவரை போல ஒரு வீரர் முக்கியமான போட்டியில் இருக்கவேண்டும்” எனவும் ராயுடு கூறியுள்ளார்.
