டெல்லி :தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை நடக்கவிருக்கிறது. ஆனால் இந்திய அணியின் தலைமைக்கே பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், தற்போதைய ஒருநாள் கேப்டன் சுப்மன் கில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே விளையாடுவது சந்தேகம். அதைத் தொடர்ந்து ஒருநாள் தொடரிலும் அவர் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதைப்போலவே, துணைக் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து வெளியேறும் நிலை உள்ளது. இதனால் கேப்டன், துணைக் கேப்டன் இருவருமே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ரோஹித் சர்மாவை சமீபத்தில்தான் ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள். அதனால் மீண்டும் அவரிடம் தலைமை ஒப்படைப்பது சாத்தியமில்லை என்று செலக்ஷன் கமிட்டி நினைக்கிறது. விராட் கோலி கடைசியாக 2022-ல்தான் எந்த வடிவிலும் இந்தியாவை வழிநடத்தினார். அதனால் அவரையும் கேட்க மாட்டார்கள்.
ஹர்திக் பாண்டியா ஒரு விருப்பமாக இருக்கலாம் என்றாலும், அவரும் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகம்தான். இதனால் செலக்டர்கள் தலைமைக்கு யாரைத் தேர்வு செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.இப்போது இருக்கும் மூத்த வீரர்களில் கே.எல். ராகுல்தான் ஒரே தேர்வு. ராகுல் இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார் . அதில், அவர் 8 வெற்றி, 4 தோல்வியை கண்டுள்ளார். கடைசியாக 2023-ல்தான் கேப்டனாக இருந்தார். இப்போது அவர் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாகவே அதிகம் விளையாடுகிறார். அணியில் அனுபவமும் உள்ளது,
அமைதியான தலைமைத்துவமும் உள்ளது. அதனால் ராகுலைத்தான் முதல் விருப்பமாக பார்க்கிறார்கள்.மற்றொரு சுவாரஸ்யமான வாய்ப்பு ரிஷப் பண்ட். ஆஸ்திரேலியா தொடரில் ஒருநாள் அணியில் இடமில்லை என்றாலும், இப்போது காயத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டார். டெஸ்ட் தொடரில் தலைமைக்குழுவில் உள்ளார்; டி20-யில் ஏற்கனவே இந்தியாவை வழிநடத்தியுள்ளார். ஒருநாளில் இதுவரை கேப்டனாக இல்லை என்றாலும், இளம் வீரர்களிடம் செல்வாக்கு உள்ளது, தைரியமான முடிவுகள் எடுப்பார்.
அதனால், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் பண்டையும் பரிசீலிக்கிறார்கள். எனவே, சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் உறுதியாக வெளியேறினால், கே.எல். ராகுல்தான் மிகப் பெரிய வாய்ப்பு. அடுத்தபடியாக ரிஷப் பண்ட். இந்த இருவரில் ஒருவர்தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இந்தியாவை வழிநடத்துவார் என்று தெரிகிறது. அணி அறிவிப்பு நவம்பர் 23-க்குள் வெளியாகும் எனவே அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.
