”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!
மாநிலம் தன் குடிமகனையே கொன்றுள்ளது என்று அஜித்குமார் வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்னர்.

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித் குமார் உடற்கூராய்வு அறிக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில், உடற்கூராய்வு அறிக்கையை மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோயில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணையில், அஜித்குமார் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது.
அஜித் குமார் உடலில் எந்த பாகங்களும் விடுபடாமல், அத்தனை இடங்களிலும் காயம் உள்ளது. சாதாரண கொலை வழக்கு போல் இல்லை, அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார், 44 காயங்கள் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது, போலீஸ் கூட்டாக சேர்ந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது. இது கொடூரமான சம்பவம்.
அஜித்குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை. FIR பதியாமல் சிறப்புப்படை எப்படி வழக்கை கையில் எடுத்தது? முதல் தகவல் அறிக்கை பதியாமல், சிறப்புப்படை எப்படி வழக்கைக் கையிலெடுத்தது? அதிகாரமே இத்தகைய மனநிலையை காவல் துறையினருக்கு தந்திருக்கிறது. மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது என மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் நிகழ்வை இயக்கியது யார்? பதவி ஆணவத்தில் காவலர்கள் அஜித்தை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மூத்த அதிகாரியையாவது அக்குழு கொண்டிருக்க வேண்டும். இனிவரும் வருங்காலங்களில் எந்த இடத்திலும் காவல்துறையினர் இதுபோல நடந்து கொள்ளக்கூடாது. கல்வியறிவு அதிகமுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்தில், இதுபோன்ற நிகழ்வு ஆபத்தானது.
அஜித்குமார் காவலர்களால் தாக்கப்படும் வீடியோ காட்சியை எடுத்தவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கிறார். வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது? யார் அங்கு இருந்தனர்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அஜித்தை தாக்கிய நிகழ்வின் இயக்குநர் யார்? 3 தனிப் படை விசாரணைக்கு உத்தரவிட்டது யார்? தாக்குதல் நடத்தப்பட்ட கோயிலின் CCTV காட்சிகள் எங்கே? 5 போலீசார் கூட்டாக சேர்ந்து இந்த கொடூர சம்ப்வத்தை அரங்கேற்றி உள்ளனர் என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வு கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.
அது மட்டும் இல்லாமல், அஜித் குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை, உயரதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளது. 5 பேர் மட்டுமே வழக்கில் சேர்ப்பு என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்னர்.
இறுதியில், அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது என அரசுத் தரப்பு வாதத்தை முன் வைத்த நிலையில், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.