சென்னை : கத்தரி வெயில் முடிந்து ஜூன் மாதம் பிறந்துள்ள நிலையில், தமிழக மக்களுக்குக் குளு குளு செய்தியாக அடுத்த 5 நாட்களுக்கான (ஜூன் 6 முதல் ஜூன் 10 வரை) அதிகாரப்பூர்வ மழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் வசிப்பவர்கள் அடுத்த சில நாட்களுக்குக் குடை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்போகும் பலத்த காற்று மற்றும் இடி மின்னல் காரணமாக எந்தெந்த மாவட்டங்களுக்கு என்ன அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பதை முழுமையாகப் பார்ப்போம்.
இன்று ஜூன் 6-ஆம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதைத் தவிர தென்காசி, திருநெல்வேலி (மலைப்பகுதிகள்)தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூன் 7 (நாளை): தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கொங்கு மண்டல மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்க்கும்.
ஜூன் 8 (திங்கள்): தென்காசி, திருநெல்வேலி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை தொடரும்.
இந்த 5 நாட்களிலும் தமிழகத்தின் மற்ற ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை மட்டுமே பெய்யக்கூடும். எனவே, தலைநகர் சென்னைக்கு இப்போதைக்குக் கனமழை ஆபத்து இல்லை என்றாலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிடுபவர்கள் தங்களின் பயணங்களைச் சற்று தள்ளி வைப்பது பாதுகாப்பானது
