நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!
குஜராத்திற்கு எதிரான போட்டியில் விக்கெட் எடுத்த பிறகு திக்வேஷ் ரதியின் சர்ச்சைக்குரிய கொண்டாட்டத்தை நினைவு கூறும் வகையில் ஆகாஷ் சிங் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி மோதியது. இந்த போட்டியில் லக்னோ அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. இந்த போட்டியின் போது லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங் சக அணி வீரர் டிக்வேஷ் ரதியின் பிரபலமான “நோட்டு புத்தக கொண்டாட்டத்தை” (Notebook Celebration) மீண்டும் செய்து கவனத்தை ஈர்த்தார்.
லக்னோ அணி 235 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்த நிலையில், அடுத்ததாக களமிறங்கிய குஜராத் அந்த இலக்கை துரத்தி கொண்டிருந்தபோது ஆகாஷ் சிங் 10-வது ஓவரின் மூன்றாவது பந்தில் ஒரு சிறந்த மெதுவான இன்ஸ்விங்கர் பந்தை வீசி, குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய வீரரான ஜோஸ் பட்லரை 33 ரன்களில் (18 பந்துகளில்) வீழ்த்தினார். அவருடைய விக்கெட்டை எடுத்த பிறகு ஆகாஷ் சிங், டிக்வேஷ் ரதியின் பிரபலமான “நோட்டு புத்தக கொண்டாட்டத்தை” செய்து, டக்அவுட்டை நோக்கி புன்னகையுடன் அவருக்கு அர்ப்பணித்தார்.
ஏற்கனவே, டிக்வேஷ் ரதி “நோட்டு புத்தக கொண்டாட்டத்திற்கு” பிரபலமானவர். விக்கெட் எடுத்தாலே இந்த மாதிரி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அபராதத்தை வாங்கிக்கட்டிக்கொள்வர். ஆனால், இந்த கொண்டாட்டம் அவருக்கு பல சர்ச்சைகளையும் தந்துள்ளது. முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான போட்டியில், டிக்வேஷ் ரதி, அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு இந்த கொண்டாட்டத்தை செய்தார். இது அபிஷேக் ஷர்மாவுடன் வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.
இதனால் ஐ.பி.எல் நிர்வாகம் தலையிட்டு, டிக்வேஷுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது மற்றும் 50% போட்டி கட்டணத்தை அபராதமாக விதித்தது.டிக்வேஷ் ரதி இந்த சீசனில் மூன்று முறை ஐ.பி.எல் நடத்தை விதிகளை (Article 2.5) மீறியதால், மொத்தம் ஐந்து டிமெரிட் புள்ளிகளைப் பெற்றார்.
இதில், ஏப்ரல் 1, 2025 அன்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஒரு புள்ளியும், ஏப்ரல் 4, 2025 அன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இரண்டு புள்ளிகளும், சமீபத்திய சன்ரைசர்ஸ் ஆட்டத்தில் இரண்டு புள்ளிகளும் அடங்கும். இதன் விளைவாக, அவர் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் விளையாட முடியவில்லை. எனவே, அவர் இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆகாஷ் சிங் விளையாடினார். அவர் இந்த போட்டியில் இல்லாத நிலையில் அவருடைய கொண்டாட்டத்தை ஆகாஷ் சிங் செய்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025