அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!
பெசன்ட் நகர் மின்மயானத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டது.

சென்னை : உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானதை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில், கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்து உடலுக்கு, மு.க.அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். காலையில், மு.க.முத்து மறைந்த செய்தியறிந்து மதுரையிலிருந்து விரைந்து வந்த மு.க.அழகிரி, தனது அண்ணன் உடலைக் கண்டதும் துக்கம் தாளாமல் கண்ணீர் சிந்தினார். பின்னர், அவரை கனிமொழி மற்றும் உறவினர்கள் தேற்றினர்.
பின்னர், மு.க.முத்துவின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதன்படி, பெசன்ட் நகர் மயானத்திற்கு முத்துவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இதில், ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் அதில் பங்கேற்றனர்.
ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட மு.க.முத்துவின் உடல் சரியாக, மாலை 5 மணிக்கு இறுதி சடங்குகளுடன் தகனம் செய்யப்பட்டது. அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தனது சகோதரர் மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு, சோகமாக புறப்பட்டு சென்றார்.