விபத்துக்கு நடுவே செல்பி…கடுப்பாகி கடுமையாக திட்டிய ஜீவா!
விபத்தை பொருட்படுத்தாமல் ஜீவாவை பார்த்து புகைப்படம் எடுக்க வந்தவர்களை நோக்கி ஆபாசமாக திட்டி கோபத்தை ஜீவா வெளிப்படுத்தினார்.
சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சாலையோர தடுப்பில் மோதி நடிகர் ஜீவா சென்ற கார் விபத்தில் சிக்கியது. ஜீவா மற்றும் அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு திரும்பியபோது சின்னசேலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம், இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, பைக் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக ஜீவா காரை திருப்பியுள்ளார். அப்போது, சாலையோர தடுப்பு கட்டையில் மோதி அவருடைய கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் காயமின்றி ஜீவா மற்றும் அவருடைய மனைவி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காரில் இருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். விபத்தை பொருட்படுத்தாமல் அக்கம் பக்கத்தினர் ஜீவாவை புகைப்படமும் , அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டிருந்தார்கள். இதனால் டென்ஷனான ஜீவா ஆபாச வார்த்தைகளால் அவரை திட்டவும் செய்தார். அத்துடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்தவருடைய போனையும் ஜீவா பிடிங்கி சென்றார்.
பிறகு, உடனடியாக ஜீவா கால் செய்து மாற்றுக்கார் வரவழைத்து அதில் ஜீவா மற்றும் அவரது மனைவி சேலத்திற்கு சென்றனர். மேலும், விபத்து ஏற்பட்ட அவரது காரை பறிமுதல் செய்து சின்னசேலம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.