பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது – கனிமொழி

Kanimozhi tweeted that if the students' voices had been listened to, the crime could have been prevented in a timely manner.

மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும் என கனிமொழி ட்வீட்.

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய பெற்றோர் முயற்சி செய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாணவி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அந்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, பாலியல் துன்புறத்தலில் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கருப்பு உடை அணிந்து சக மாணவர்கள் கோவையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கனிமொழி எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது. தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

unknown node