விஜயை பார்த்தா பொறாமையா இருக்கு...ஈஸியா ஆட்சிக்கு வந்துட்டாரு! பவன் கல்யாண் கிண்டல்!

தமிழ்நாட்டில் மிக எளிதாக ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள் என முதலமைச்சர் விஜயின் பெயரைக் குறிப்பிடாமல் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியுள்ளார்.

Hero Image

ஆந்திரா : துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

அமராவதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய பவன் கல்யாண், தனது 15 ஆண்டுகால அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்தபோது, தமிழக அரசியலை குறிப்பிட்டு “எனக்குக் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது” என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “இப்போது தமிழக அரசியலை பார்த்தால், அங்கே மிகவும் எளிதாக ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள் போல தெரிகிறது. கட்-அவுட், ஒளிக்காட்சி அமைப்புகள் வைத்து மகிழ்ச்சியாக வெற்றி பெற்று விடுகிறார்கள். அதை பார்த்தால் எனக்குக் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் கடந்த 15 ஆண்டுகளாக தெருக்களில் சுற்றி அரசியல் செய்து வருகிறேன். ஒரு அரசியல் கட்சியை நடத்துவது சாதாரண விஷயம் கிடையாது. ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றிணைத்து கொண்டு செல்ல வேண்டும். நம்முடைய குடும்பத்திலேயே அனைவரையும் ஒரே கருத்தில் இணைக்க முடியாத சூழல் இருக்கும். அப்படியிருக்க, ஒரு கட்சியை தொடங்கி சமூக மாற்றத்திற்காக போராடுவது மிகப்பெரிய சவால்,” என்று தெரிவித்தார்.

மேலும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் சூழல்கள் முற்றிலும் வேறுபட்டவை என்றும், கூட்டணி அரசியல் தான் ஆந்திராவிற்கு பொருத்தமான அணுகுமுறை என்றும் அவர் குறிப்பிட்டார்.பவன் கல்யாண் நேரடியாக விஜயின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், சமீபத்தில் நடிகராக இருந்து தமிழக முதலமைச்சராக உயர்ந்த விஜயை குறிப்பிட்டே அவர் இந்த கருத்துகளை பகிர்ந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.