இதை செய்யாவிட்டால் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் – தலைமை தேர்தல் ஆணையர் பேச்சு!

வாக்காளர் பட்டியலில் பலரது முகவரி ‘0' என இருப்பதை சுட்டிக்காட்டிய மக்களவை எதிர்க்கட்சி ராகுல் காந்திக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சில கேள்விகளை முன் வைத்துள்ளார்.

rahul gandhi Gyanesh Kumar

டெல்லி :காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டதாகவும், தேர்தல் செயல்முறையில் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், ஆகஸ்ட் 17, 2025 அன்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், ஏழு நாட்களுக்குள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை வைப்பது இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும்,” என்று கடுமையாக எச்சரித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிரூபிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்திய ஞானேஷ்குமார், “மக்களவைத் தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத் நிலை முகவர்கள், மற்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் பணியாற்றினர். இவ்வளவு வெளிப்படையான செயல்முறையில், இத்தனை மக்கள் முன்னிலையில், வாக்குகளைத் திருடுவது சாத்தியமா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பிகாரில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக 15 நாட்கள் அவகாசத்தில் 28,370 புகார்கள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டதாகவும், 7 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களுடன் இணைந்து தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்த ஞானேஷ்குமார், “வாக்காளர்களை குறிவைத்து, தேர்தல் ஆணையத்தின் தோளில் துப்பாக்கி வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்.

பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மக்களோ, தேர்தல் ஆணையமோ அஞ்சாது,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். பிகாரின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையில் அனைத்து கட்சிகளுக்கும் பங்கு உள்ளதாகவும், ஆணையம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” 532“போலியான புகார்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்,” என்று அவர் உறுதியளித்தார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்துவதாக உள்ளதாக ஞானேஷ்குமார் குறிப்பிட்டார். “தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவும், நியாயமாகவும் செயல்படுகிறது. இந்திய தேர்தல் செயல்முறை உலக அளவில் மதிக்கப்படுகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் அதை அவமதிக்க முடியாது,” என்று அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில், ஆணையம் தனது நிலைப்பாட்டை உறுதியாக முன்வைத்து, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கோரியுள்ளது, இல்லையெனில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.