நிமிஷா பிரியா வழக்கு: பணம் வாங்க மறுக்கும் குடும்பம்…காப்பாற்ற தொடரும் முயற்சிகள்!

நிமிஷா பிரியா மரண தண்டனையைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன இன்று சூஃபி அறிஞர் நேரில் ஆஜராகிறார்.

nimisha priya case update

டெல்லி :  கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2017இல் யேமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, 2020இல் யேமன் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். நிமிஷா, தனது பாஸ்போர்ட்டை மீட்க மயக்க மருந்து செலுத்தியபோது, அளவுக்கு அதிகமான மருந்து தலாலின் மரணத்திற்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு, 2008இல் அவர் வேலைக்காக யேமனுக்கு சென்று, தலாலுடன் கூட்டு வணிகத்தில் ஈடுபட்டபோது தொடங்கியது.

அவர்களது உறவு மோசமடைந்ததால், தலால் தன்னை துன்புறுத்தியதாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும் நிமிஷா குற்றம்சாட்டினார். 2023இல், நிமிஷாவின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு, மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்திய அரசு, கேரள அரசு, மற்றும் ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்‌ஷன் கவுன்சில்’ ஆகியவை நிமிஷாவை காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டன. யேமனின் ஷரியா சட்டப்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால் தண்டனையைத் தவிர்க்க முடியும்.

இதற்காக, யேமனில் உள்ள இந்திய பிரதிநிதிகள், கேரளாவின் முக்கிய முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியாரின் வழிகாட்டுதலுடன், தலாலின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைகளால், ஜூலை 16, 2025 அன்று நிமிஷாவின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இது, மேலும் ஆலோசனைகளுக்கு கூடுதல் நேரம் கிடைத்ததால், பிரதிநிதிக் குழுவுக்கு ஆறுதல் அளித்தது.மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க, தலாலின் குடும்பத்தை மன்னிப்பு வழங்கச் செய்யும் முயற்சிகள் தொடர்ந்தன. நிமிஷாவின் குடும்பமும், ஆக்‌ஷன் கவுன்சிலும் சுமார் 1 மில்லியன் டாலர் (8.6 கோடி ரூபாய்) இரத்தப் பணம் (தியா) வழங்க முயற்சித்தனர். ஆனால், தலாலின் சகோதரர் அப்துல்ஃபத்தா மஹ்தி, “இரத்தம் விலைக்கு வாங்கப்பட முடியாது, உண்மை மறக்கப்படாது. கிசாஸ் (பழிக்குப்பழி நீதி) மட்டுமே எங்கள் கோரிக்கை,” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, மன்னிப்பு மறுத்தார். இந்திய ஊடகங்கள் நிமிஷாவை பாதிக்கப்பட்டவராக சித்தரித்து உண்மையை திரிக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

நிமிஷாவின் தாயார் பிரேமகுமாரி, “தலாலின் குடும்பத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறோம்,” என்று கூறி, இரத்தப் பணம் குறித்த வதந்திகள் பேச்சுவார்த்தைகளை பாதிக்கின்றன என்று கவலை தெரிவித்தார்.இந்த சவாலான சூழலில், யேமனின் புகழ்பெற்ற சூஃபி மதகுரு ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸ், தலாலின் குடும்பத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார்.

இதற்கு முன், அவரது பிரதிநிதி மட்டுமே இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். ஷேக் ஹபீப்பின் நேரடி தலையீடு, தலாலின் குடும்பத்தையும், அவரது கோத்திரத்தையும் மனம் மாற்றக்கூடும் என்று நம்பப்படுகிறது. காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார், யேமன் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து, இந்த முயற்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். ஆனால், இரத்தப் பணம் குறித்த செய்திகள் தலாலின் குடும்பத்தை கோபப்படுத்துவதாகவும், இது நயதந்திர முயற்சிகளுக்கு தடையாக இருக்கலாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தற்போது, நிமிஷாவின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி, தலாலின் குடும்பம் மன்னிப்பு வழங்கி, இரத்தப் பணத்தை ஏற்க ஒப்புக்கொள்வது மட்டுமே. இந்திய அரசு, ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனாவில் உள்ள யேமன் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது, ஆனால் இராஜதந்திர உறவு இல்லாதது பெரும் சவாலாக உள்ளது. எனவே இந்த வழக்கில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்