பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) அதிகாலை 8 மணி முதல் தொடங்கியது, மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆரம்பம் முதலே வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளது. 243 தொகுதிகளில், NDA 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, இது பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளை விட அதிகம். பாரதிய ஜனதா கட்சி (BJP) 87 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது, ஜனதா தள ஐக்கியம் (JD(U)) 79 தொகுதிகளில் உள்ளது, லோக் ஜன சக்தி கட்சி (LJP-RV) 21 தொகுதிகளில் உள்ளது. இது 2020 தேர்தலில் NDA பெற்ற 125 இடங்களை விட 62 இடங்கள் கூடுதலாகும்.
எதிர்க்கட்சி மகா கட்பந்தன் கூட்டணி (MGB) 48 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது, எனவே, தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, பாட்னாவில் உள்ள BJP மற்றும் JDU அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். JDU தலைமையகத்தின் வெளியே, தொண்டர்கள் இனிப்புகள் பரிமாற்றி, பட்டாசுகள் வெடித்து, டிரம் அம்புகள் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
JDU தலைவர் சோடு சிங், “நிதீஷ் குமாருக்கு வாழ்த்துகள், பீகார் மக்கள் அவரை வெற்றியடையச் செய்துள்ளனர், இங்கு ஹோலி மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நடக்கிறது” என்று கூறினார். அதே போல், டெல்லியில் உள்ள BJP தலைமையகத்திலும் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன, அங்கு 501 கிலோ லட்டு இனிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதே சமயம், பல்வேறு தலைவர்கள் NDA-வின் வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “பீகார் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். அவர், “காங்கிரஸ் தலைமையிலான INDI கூட்டணியை மக்கள் புறக்கணித்துள்ளனர், இது பாஜக கூட்டணி மீதான மக்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது” என்றும் கூறினார்.
மேலும், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “பீகார் சாந்தி, நீதி, வளர்ச்சியைத் தேர்ந்தெடுத்துள்ளது, குழப்பம், ஊழல் அரசுக்கு இடமில்லை” என்று பாராட்டினார். BJP தலைவர் அனுராக் தாகூர், “ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் 91 தேர்தல்களில் தோல்வியடைந்தது, பீகாரில் NDA-வின் வெற்றிக்கு நன்றி” என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
