சென்னை : செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முக்கிய அமைச்சரான சி.டி.ஆர் நிர்மல்குமார், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு, கச்சத்தீவு விவகாரம் மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) இன்றைய கூட்டணி எதிர்ப்புப் பேட்டி குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், இடதுசாரித் தோழர்கள் தங்களிடம் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். தேர்தல் என்று வரும்போதுதான் கட்சிகளுக்கிடையே அதிகாரப்பூர்வக் கூட்டணி இருக்கும் என்றும், மற்றபடி தொகுதி உடன்பாடு என்று வரும்போது திமுக போன்ற கட்சிகளுடன் என்ன நிபந்தனைகள் (Terms) இருந்ததோ, அதேபோல்தான் தவெக-விடமும் இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் தேசியக் குழு மற்றும் மாநிலக் கமிட்டியைக் கூட்டித்தான் இறுதி முடிவை எடுக்க முடியும் என்ற சூழல் இருந்தாலும், தவெக அரசுக்கு வெளியில் இருந்து தங்களது ஆதரவு கண்டிப்பாகத் தொடரும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
தவெக அரசுக்கு ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆதரவு நீடிக்குமா என்கிற உறுதிமொழி இல்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், கம்யூனிஸ்டுகள் என்ன சொன்னாலும் சரி, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் தவெக அரசிடம் எந்தவொரு தொய்வும் இருக்கப் போவதில்லை என்றார். இது முழுக்க முழுக்க எளிய மக்களுக்கான அரசு, இதனால் மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகள் முழு அளவில் தொடரும், அதில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.
கடந்த கால மிசா (MISA) சிறைவாசம் மற்றும் சிறை மரணங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், இது தொடர்பாக ஏற்கனவே நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் பல விவாதங்கள் நடந்து முடிந்துவிட்டன என்றார். அன்றைய அவசரநிலை (Emergency) காலத்தில் சிறைக்குள் அடைக்கப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலேயே இதற்கான பல சாட்சியங்கள் (Witness) இருக்கின்றன என்றார். குறிப்பாக, சிறைக்குள் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சிட்டி பாபுவின் மரணத்தில் பல உண்மைகள் சாட்சியங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்திற்குள் மேலும் ஆழமாகப் போக விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், கடந்த கால திமுகவின் வன்முறைகளுக்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம் என்றார்.
திமுக-வை மிகக் காட்டமாக விமர்சித்த அமைச்சர் நிர்மல்குமார், 70 வருஷ கட்சி, மூன்று தலைமுறையாக அரசியலில் இருக்கிறோம் என்று சொல்லும் திமுகவினர், இத்தனை காலமாக மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பினார். காவிரி விவகாரத்தில் அன்றைய திமுக அரசு செய்த தவறுகளினாலும், விட்டுக் கொடுத்ததாலும் தான், இன்று தமிழ்நாட்டிற்கான உரிமைகளை மீட்டெடுக்க இத்தனை வருடங்களாக நாம் போராட வேண்டியுள்ளது என்றார்.
கடந்த ஐந்து வருட திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசுத் துறையையும் எவ்வளவு மோசமாகக் கெடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் ரிவியூ (Review) செய்து, மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வர எவ்வளவு போராடிக் கொண்டிருக்கிறோம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார். நீங்கள் எதைச் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை இன்று இருக்கும் புதிய தலைமுறைக்கு நாம் தோண்டி எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.
