சென்னை :கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது ஆதவ் அர்ஜுனா பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
பின்னர், அவர் எந்த கட்சியில் இணைய போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், சமீப நாட்களாக அவர் த.வெ.க கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அதன்படி, பிப்ரவரி 2 ஆம் தேதி தவெக கட்சி துவங்கி முதலாமாண்டு நிறைவுபெறுகிறது. அதனை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்று விழா நடைபெறும். அன்றைய தினம் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இணைவது குறித்த செய்தி அதிகாரபூர்வமாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அதாவது, நேற்றைய தினம் (ஜன.29) தவெக தலைவர் விஜய்யை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை பட்டினம் பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் சந்திப்பு மேற்கொண்டதாகவும், அப்போது தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் இருந்துள்ளனர். ஆதவ் அர்ஜுனா, தவெக கட்சியில் இணைந்து செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு துவக்க விழாவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, த.வெ.க துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று பிப்.2ம் தேதி தெரிந்து விடும்.
இதனிடையே, இன்று காலை செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக கட்சி தலைவர் திருமாவளவன் “விஜயுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்து இயங்கப்போகிறார் என்பது மகிழ்ச்சிதான்.. வாழ்த்துகள். எங்களுடன் தொடர்ந்து இயங்கவில்லை என்பது வருத்தம்தான்” என்று கூறியுள்ளார்.
