"அதிமுக – பாஜக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்" – எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள்தான் பெரிய முதல் கட்சிகள், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையேதான் நேரடி போட்டி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Edappadi Palanisamy - ADMK

சென்னை :அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் தனது கட்சி இணைந்து செயல்படுவதால், ஆளும் திமுக கட்சிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தற்பொழுது, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ”தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள்தான் பெரிய முதல் கட்சிகள், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையேதான் நேரடி போட்டி, 210 தொகுதிகளுக்கு மேல் அதிமுக கூட்டணி வெல்லும்” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளர்.

மேலும், 2026 தேர்தலில் எங்களுக்கும் திமுகவிற்கும்தான் போட்டி என சில கட்சிகள் கூறுகிறார்களே கள சூழல் அப்படி உள்ளதா? அல்லது கட்டமைக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி. அது எந்த கட்சி என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.