பாஜகவின் முகமூடியாகவும், பொம்மை கட்சியாகவும் இருக்கிறது அதிமுக - ராகுல் காந்தி!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களது ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக பாஜகவிடம் சரணடந்திருக்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Hero Image

திருச்சி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி திருச்சி துறையூரில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அதிமுகவை “பாஜகவின் முகமூடி” மற்றும் “பொம்மை கட்சி” என்று கடுமையாக விமர்சித்தார்.

ராகுல் காந்தி பேசியதாவது “பாஜகவின் முகமூடியாகவும், பொம்மை கட்சியாகவும் இருக்கிறது அதிமுக. இவர்கள் வழியில்தான் பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் தமிழ்நாட்டுக்குள் நுழையப் பார்க்கிறார்கள்.அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களது ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக பாஜகவிடம் சரணடந்திருக்கிறார்கள். ED, IT போன்ற அமைப்புகளால் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.” எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது என பாஜகவுக்கு நன்றாக தெரியும். அவர் தனது கொள்கைகளை எதற்காகவும் சமரசம் செய்துகொள்ள மாட்டார் என்றும் பாஜகவுக்கு நன்றாக தெரியும்.”ராகுல் காந்தி, வரும் சட்டமன்றத் தேர்தலை “சாதாரண தேர்தல் அல்ல” என்று விவரித்தார். “ஸ்டாலினை அகற்றிவிட்டு பாஜக தமிழ்நாட்டில் பொம்மை முதல்வரை அமர்த்த முயற்சி செய்து வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, “மோடியும், அமித்ஷாவும் தமிழ்நாடு முதலமைச்சரை மிரட்டலாம் என கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.தமிழ் கலாசாரத்தை, பண்பாட்டை அழிக்க நாம் ஒருபோதும் அவர்களை இங்கு அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டிற்கும் எனக்கும் உள்ள உறவை அவர்களால் ஒருபோதும் குலைக்க முடியாது. இது அரசியல் உறவு அல்ல. இது அன்பின் உறவு” என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

மேலும், திருச்சி துறையூரில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியின் உரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க காங்கிரஸ் உறுதியாக நிற்கும் என்று அவர் வலியுறுத்தியது கூட்டத்தில் பெரும் கரகோஷத்தை ஏற்படுத்தியது.